Saturday, April 7, 2012

'3' - எனது பார்வையில். எப்பூடி.....


'3' - எனது பார்வையில்..


கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது. 

திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அமங்கலமாக ஆரம்பிக்கின்றது; சுருதி, சுந்தர் Point Of View வில் கதை பிளாஷ்பாக் மூலம் சொல்லப்படுகின்றது, குழப்பமான கதைக்கு குழப்பமில்லாத தெளிவான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர்; இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாகவே நகர்த்தி இருக்கின்றார். முதல் பாதி இளமை, காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என்று விறுவிறுப்பாக நகர்கின்றது; இரண்டாம் பாதியில் காட்சிகள் அனைத்தும் இறுக்கமாகவும் மெதுவாகவும் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும்போதே இதுதான் கிளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தாலும் திடீரென படம் நிறைவடைகின்றது. படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை....

தனுஷ் - இந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம், வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர். கெட்டப் போட்டால்த்தான் நடிப்பில் சிறப்பான வெளிப்பாட்டை காட்ட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தனுஷ் தவறென நிரூபித்திருக்கின்றார். இந்த மாதிரியான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நன்றாக போகவில்லை என்று தனுஸ் கவலைப்படத் தேவையில்லை; பதினைந்து, இருபது வருடம் கழித்து தனது கேரியரை திரும்பி பார்க்கும்போது இவைதான் தனுசின் கேரியரை பூரணப்படுத்தும்!!! பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும், அசாதாரண நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்; ஆனாலும் அந்த கிளைமாக்ஸில் - Hats Off To U Danush

ஸ்ருதி - சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் "பெரிசா ஒண்ணுமே இல்லையேடா" என்று ஒரு வசனம் சொல்லுவார்; அது உண்மைதான்; ஆனால் அவரது பெர்போமான்ஸ் எதிர்பார்க்காத ஒன்று. 7 ஆம் அறிவில் அலுப்படித்த ஸ்ருதியா இதென்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். ஒரு திரைப்படத்திற்குள் இத்தனை முதிர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்காத ஒன்று!! புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான்!! காதல், பாசம், பிரிவு என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார். பேரழிகியெல்லாம் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருக்கின்றார்!!!

பிரபு, பனுபிரகாஷ், பானுப்பிரியா, ரோஹினி போன்றவர்கள் தமக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்திருக்கின்றார்கள். சிவகார்த்திகேயன் முதல் பாதியை கலகலப்பாக்கினாலும் சிவகார்த்திகேயனிடமிருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை டைட்டிலில் அவர் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் உணர்த்தியது!!! சுந்தர் 'மயக்கம் என்ன'வில் டம்மி அக்கப்பட்டவர், இங்கு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தனுஷ், சுருதிக்கு அடுத்து அதிக காட்சிகள் இவருக்குத்தான்; ஆகா ஓகோன்னு இல்லாவிட்டாலும் தன்னால் குடுக்ககூடிய அதிகபட்ச்சத்தை நிறைவாக கொடுத்திருக்கின்றார்.(சுந்தருக்கு முன்னாடி தனுஷ் ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற சீன் தொடர்ந்துகிட்டே இருக்கு :p)

அனிருத்தின் இசையில் மிகப்பெரும் ஹிட்டான கொலைவெறி பாடலை தவிர ஏனைய பாடல்களுக்கு கதையை ஒட்டியே காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது; கொலைவெறி பாடல் எதிர்பார்க்கப்பட்டது போலவே திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அதிகமான இடங்களில் நிசப்தத்தை பயன்படுத்தி இருக்கும் அனிருத் சில இடங்களில் சிறப்பான பின்னணியை வழங்கியிருக்கின்றார்; சில இடங்கள் சப்பென்றும் இருக்கின்றது. பொல்லாதவன், ஆடுகளம் புகழ் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்; கதையின் தேவைக்கு, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இவர் கொடுத்த லைட்டிங் பிரமாதம். கோலா பாஸ்கரின் எடிடிங் Point Of View வில் சொல்லப்படும் கதை என்பதால் ஒரு சில இடங்களில் லாஜிக்கை உறுத்தினாலும், குழப்பமில்லாத, தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கின்றது.



கொலைவெறி பாடல் என்னதான் பட்டையை கிளப்பி எதிர்பார்ப்பை உயர்த்தினாலும், ஐஸ்வர்யாவால் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்தது. முதலில் வந்த ட்ரெயிலர்களும் அதை நிரூபிப்பதுபோலத்தான் இருந்தது. படம் சிறுபிள்ளை வேளாண்மை போலத்தான் இருக்கும் என்கின்ற நினைப்பை தகர்த்திருக்கின்றார் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் ஐஸ்வர்யா; படம் முழுவதும் ஆங்காங்கே செல்வராகவன் டச்!! ஆனாலும் பல இடங்களில் ஐஸ்வர்யா 'அட' போட வைத்திருக்கின்றார். பல காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. ஒரு இயக்குனராக ஐஸ்வர்யா ஜெயித்திருக்கின்றார்!!! கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாதியில் அதிகமான நேரம் நாயகனும், நாயகியும் அழுவது போன்ற காட்சிகள் சலிப்பையும், திரைக்கதையில் தொய்வையும் ஏற்ப்படுத்தியத்தையும் மறுப்பதற்கில்லை!!!

'3' பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை; இவர்கள் திரையரங்கு சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனையவர்கள் '3' திரைப்படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்!! 

No comments:

Post a Comment