ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘
தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன்.
இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு.
இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. வைரம் என்று தெரியாத பழங்குடி, அதை இஞ்சி நசுக்க பயன்படுத்திய கதைதான். அத்தனையும் வேஸ்ட்.
நவசினிமா அப்பாக்கள் காதலை எதிர்ப்பதில்லை. உன் வாழ்வு. உன் முடிவு என்று விட்டு விடுகிறார்கள். அம்மாக்கள் மெலோடிராமா கண்ணீர் விடுவதில்லை. ‘ ராஜினாமா ’ பார்வையோடு முடிந்து போகிறார்கள். கதைநாயகனுக்கு என்ன வேலை, என்ன சம்பளம், அவன் அப்பா என்ன தொழில் செய்கிறார் எல்லாம் ரசிகனின் ஊகிப்புக்கு. அதே தான் கதை நாயகியின் குடும்பத்துக்கும். தனுஷ் ஒரு இடத்தில் சொல்கிறார்:
‘ லவ் பண்றியான்னு இப்பவே சொல்லிடு. இல்லைன்னா சாயங்காலம் வீணா அதைக் கேக்க காத்திருக்க வேண்டாமே? வேற வேலை பாக்கலாம். ‘
இதுதான் இன்றைய யுவன் யுவதியின் கண்ணோட்டம்.
இன்னொரு இடம், காது கேட்காத சுருதியின் தங்கைக்கு, மொழியின் ஒலி தெரியாததால், வாயும் பேச முடியாது. ஆனாலும் உதட்டசைவை வைத்து என்ன பேசு கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் திறன் உண்டு. சுருதியின் காதலுக்காக அவள் முதன் முதலில் பேசுகிறாள்.
‘ போ(க)ட்டும் விடுங்கப்பா! ‘
தானே புயல் மாதிரி கலக்கிய ‘ கொலவெறி ‘ பாடலை கெடுக்காமல் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். அதேபோல் எல்லாப் பாடல்களும். சபாஷ்.
ராம் +2 படிக்கும்போதே ஜனனியைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். அவளுக்காக டுடோரியல் காலேஜ் கூடப் போகிறான். ஜனனி மத்யமர் குடும்பம். அவள் அம்மாவின் ஒரே ஆசை, ஜனனி மேல்படிப்புக்கு அமெரிக்கா போகவேண்டும். அதனால் குடும்பமே அமெரிக்காவில் குடியேறவேண்டும். காதலுக்காக ஜனனி பாஸ்போர்ட்டை எரிக்கிறாள். ராமைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். ராம் தன் தந்தை நிறுவனத்தில் ஒரு பொறுப்பு எடுத்துக் கொள்கிறான். பாதிக்குமேல் கதையில் குழப்பம் ஆரம்பிக்கிறது. ராமுக்கு bipolar mania. அதாவது ஒரேயடியாக துக்கத்தில் இருப்பான். அல்லது முரடனாக மாறி விடுவான். ஜனனியிடம் மட்டும் அவன் சாக்லேட் புருஷன். ஒரு கட்டத்தில் நண்பன் செந்திலுக்கு இது தெரிய வருகிறது. டாக்டர், மருந்து, மாத்திரை, சிகிச்சை என்று போய், நோய் முற்றி, ஜனனியையே கொலை செய்யும் முயற்சி வரை போய், பைத்தியமாகிறான். நோய் முற்றிவிட்டதை உணர்ந்த ராம், ஜனனியைக் காப்பாற்ற, கழுத்தறுத்து தற்கொலை செய்து கொள்கிறான்.
ஆனால் படம் இப்படி நேர்க்கோட்டுக் கதையாக இல்லை. முன்னும் பின்னும் அல்லாடி அலைக்கழிந்து, நம்மையும் ஒரு வழி ஆக்கிவிடுகிறது. தொடர்பில்லாத பல காட்சிகள், ஹா·ப் வே ஓபனிங்கில் ஆரம்பித்து, நம்மை திக்குமுக்காட வைக்கின்றன.
குறைந்த வசனங்கள். ஆனால் அதையும் கேட்க முடியாதபடி, அனிருத்தின் ஆர்வக்கோளாறு இசை, ஓங்கி ஒலித்து அமுக்கி விடுகிறது. அடுத்த படத்திற்குள் அனிருத்திற்கு, இளையராஜாவோ ரகுமானோ பயிற்சி கொடுப்பது அவசியம். இல்லை என்றால் வசனம் இல்லாமல் ‘ஆர்ட்டிஸ்ட்’ படம் போல ஆக்கிவிடுவார் எல்லாப் படத்தையும்.
ஐஸ்வர்யா இந்தப் படத்திற்கு சுருதி, அமலா பால் என்று அல்லாடியிருக்கவேண்டாம். அவரே நடித்திருக்கலாம். அவருக்கும் சுருதியின் முக ஜாடைதான். தனுஷ¤டன் நடிக்கும்போது, அனுபவமும் கை கொடுத்திருக்கும்.
நல்ல டெக்னிசியன்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு படம் ஜெயிக்காது. அதற்கு நல்ல கதையும், திரைக்கதையும் வேண்டும். 3 அதற்கு ஒரு சாட்சி.
கொசுறு
பரபரப்பாக பேசப்படுகிற படமாக இருக்கிறதே என்று 5 மணிக்கே சிற்றுண்டி- சீரங்கம் ஏரோப்ளேன் தகட்டில் செய்த தோசைக்கல்லில், அதைவிட மெலிசாக வார்க்கப்பட்ட 3 கோதுமை தோசையை சாப்பிட்டுவிட்டு 88 ஏறினேன். தியேட்டரில் செம கூட்டம். தனுஷின் ரசிகர்கள் எல்லாம் இளவட்டங்கள். தனுஷ¤ம் ஒரு குறையும் வைக்கவில்லை. சொன்ன விதத்தில் தான் நட்டு கழண்டு விட்டது.
வெளியே வந்த கூட்டத்தில் கேட்ட காமெண்ட்: கவுண்டர் போய் 70 ரூபா திருப்பிக் கேக்கணும். படம் 10 ரூபா தான் ஒர்த். ‘
No comments:
Post a Comment